இங்கிலாந்தில் இருந்து மராட்டியம் திரும்பிய 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


இங்கிலாந்தில் இருந்து மராட்டியம் திரும்பிய 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 26 Dec 2020 5:32 PM GMT (Updated: 2020-12-26T23:02:53+05:30)

இங்கிலாந்தில் இருந்து மராட்டியத்திற்கு திரும்பிய 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புனே,

இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக புதுவகையான கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது.  கடந்த வாரம் அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சன் இதுபற்றிய அறிவிப்பினை வெளியிட்டார்.  இந்த புதுவகை வைரசானது, முன்பிருந்த கொரோனா வைரசை விட மிக எளிதில் பரவுகிறது என தெரியவந்துள்ளது.  நாடு முழுவதும் மிக வேகமுடன் பரவி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்து உள்ளது.  இந்தியாவில், வருகிற 31ந்தேதி வரை இங்கிலாந்து நாட்டுக்கு விமானங்கள் செல்ல தடை அமலில் உள்ளது.  இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து மராட்டியத்திற்கு திரும்பிய 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி மராட்டிய சுகாதார துறை வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த நவம்பர் 25ந்தேதியில் இருந்து சர்வதேச விமான பயணத்தில் இங்கிலாந்தில் இருந்து மராட்டியத்திற்கு திரும்பியவர்களிடம் கொரோனாவுக்கான ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை மொத்தம் 1,122 பயணிகளிடம் நடந்த பரிசோதனைகளில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களில் நாக்பூர் நகரில் 4 பேர், மும்பை மற்றும் தானே நகரங்களை சேர்ந்த தலா 3 பேர், புனே நகரில் 2 பேர், நான்டெட், அகமதுநகர், அவுரங்காபாத் மற்றும் ராய்காட் நகரங்களை சேர்ந்த தலா ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த 16 பேரின் கொரோனா பாதிப்பு மாதிரிகள் புனே நகரில் உள்ள என்.ஐ.வி. மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  இதில், அவர்களுக்கு புதுவகை கொரோனா வைரசின் பாதிப்பு இருக்கிறதா? என்பது பற்றிய பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story