‘விவசாயிகள் சொல்வதை அரசாங்கம் கேட்க வேண்டும்’ ராகுல் காந்தி வலியுறுத்தல்


‘விவசாயிகள் சொல்வதை அரசாங்கம் கேட்க வேண்டும்’ ராகுல் காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 Dec 2020 5:57 PM GMT (Updated: 26 Dec 2020 5:57 PM GMT)

விவசாயிகள் சொல்வதை அரசாங்கம் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டம்  இன்று 31–வது நாளை எட்டியது.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளதால் தேசிய நெடுஞ்சாலை 9 மற்றும் 24 ஆகியவற்றின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

5 சுற்று பேச்சுவார்த்தையை அரசு நடத்தியும், சமரசம் ஏற்படவில்லை. வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்று விவசாயிகள் உறுதிபட கூறுவதாலும், வாபஸ் பெற மாட்டோம், திருத்தங்கள் வேண்டுமானால் செய்யலாம் என மத்திய அரசும் உறுதியாக இருப்பதால் முட்டுக்கட்டை தொடர்கிறது. பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க மத்திய அரசு அழைப்பு விடுத்தும் விவசாய அமைப்புகளிடம் இருந்து அதற்கு ஆதரவான சமிக்ஞைகள் வரவில்லை.

இந்த தருணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் போராட்டத்தையொட்டி டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:– இந்த மண்ணின் ஒவ்வொரு துளியும் இப்போது சலசலக்கிறது. விவசாயிகள் கூறுவதை அரசாங்கம் கேட்க வேண்டும். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்வார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தையொட்டிய ஒரு வீடியோ பதிவையும் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.


Next Story