காங்கிரஸ் ஆண்டு விழா கொண்டாடும் நிலையில் ராகுல்காந்தி வெளிநாடு பயணம்


காங்கிரஸ் ஆண்டு விழா கொண்டாடும் நிலையில் ராகுல்காந்தி வெளிநாடு பயணம்
x
தினத்தந்தி 27 Dec 2020 5:44 PM GMT (Updated: 27 Dec 2020 5:44 PM GMT)

காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா நாளை (28-ம்தேதி) கொண்டாடப்படும்நிலையில், ராகுல்காந்தி திடீரென வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி  திடீரென வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். இந்த தகவலை, காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ஒரு தனியார் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.

‘‘ராகுல்காந்தி, தனிப்பட்ட முறையிலான குறுகிய கால பயணமாக வெளிநாட்டுக்கு புறப்பட்டார். அவர் சில நாட்கள் வெளிநாட்டில் இருப்பார்’’ என்று அவர் கூறினார்.

ராகுல்காந்தி எந்த நாட்டுக்கு சென்றுள்ளார்? என்று கேட்டதற்கு ரந்தீப் சுர்ஜேவாலா, அந்த விவரங்களை தெரிவிக்கவில்லை.

இருப்பினும், இத்தாலி நாட்டின் மிலன் நகருக்கு செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்தாலி நாட்டில் சோனியாகாந்தியின் தாயாரான, ராகுல்காந்தியின் பாட்டி வசித்து வருகிறார். அவரை ராகுல்காந்தி இதற்கு முன்பும் நேரில் சென்று சந்தித்துள்ளார். எனவே, அவர் தன் பாட்டியை சந்திக்க சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 136–வது ஆண்டு விழா நாளை (28-ம்தேதி)கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

இந்த விழா நடப்பதற்கு முந்தைய நாளில் ராகுல்காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.


Next Story