கட்சி தலைமையை விமர்சித்த சிவசேனாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு; மராட்டிய ஆளும் கூட்டணியில் சலசலப்பு


கட்சி தலைமையை விமர்சித்த சிவசேனாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு; மராட்டிய ஆளும் கூட்டணியில் சலசலப்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 9:26 PM GMT (Updated: 27 Dec 2020 9:26 PM GMT)

எங்களது கட்சி தலைமை பற்றி விமர்சிப்பது சரியல்ல என்று சிவசேனாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால் மராட்டிய ஆளும் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் யாரும் எதிர்பாராத, கொள்கையில் முரண்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு கடந்த ஆண்டு மலர்ந்தது.கொரோனாவுக்கு மத்தியில் ஓராண்டு காலத்தை கூட்டணி அரசு வெற்றிகரமாக நகர்த்தி 2-வது ஆண்டை அடி எடுத்து வைத்துள்ள நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகள் இடையே முட்டல் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைமையை விமர்சித்தார். ராகுல்காந்தி இன்னும் பக்குவம் இல்லாதவராக தான் இருக்கிறார் என்று அவர் கூறினார். இதை உடனடியாக மாநில காங்கிரஸ் கண்டித்தது. கூட்டணி அரசு தொடர வேண்டுமானால், எங்கள் கட்சி தலைமை பற்றி விமர்சிப்பதை சரத்பவார் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கம் மீண்டும் கூட்டணியில் சலசலப்புக்கு காரணமாகி விட்டது. அதில், நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று சக்தியை உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கீழ் நாட்டின் உள்ள எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று அழைப்பு விடுத்த போதிலும்,, காங்கிரஸ் கட்சியை சிவசேனா கடுமையாக சாடியிருந்தது.

அதில் கூறப்பட்டு இருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-

பா.ஜனதாவுக்கு நரேந்திர மோடி, அமித்ஷா ஆகிய வலுவான தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரசில் அதுபோன்ற தலைவர்கள் இல்லாததால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை. நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் தான் விவசாயிகள் பிரச்சினையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஜனநாயகம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு பொறுப்பு அல்ல. எதிர்க்கட்சிகள் தான் காரணம். தற்போதைய சூழல்களை காங்கிரஸ் தீவிரமாக எடுத்து கொள்ளாவிட்டால், எதிர்காலம் அனைவருக்கும் கடினமாகி விடும்.இவ்வாறு சிவசேனா கூறியிருந்தது.

காங்கிரஸ் எதிர்ப்பு

சிவசேனாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், மாநில பொதுப்பணித்துறை மந்திரியுமான அசோக் சவான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவசேனாவுடன் நாங்கள் மராட்டிய அளவில் மட்டும் தான் கூட்டணி வைத்து உள்ளோம். இதற்காக குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வகுத்து செயல்படுகிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சிவசேனா அங்கம் வகிக்கவில்லை. இந்தநிலையில் எங்கள் கட்சி தலைமையை பற்றி சிவசேனா விமர்சிப்பது சரியல்ல. இவ்வாறு அசோக் சவான் கூறினார்.

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பொறுப்பேற்பார் என்று கூறப்படுவது குறித்து கேட்ட கேள்விக்கு அசோக் சவான் பதிலளித்து கூறுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக சோனியா பொறுப்பு வகிக்கிறார். அவர் மீது கூட்டணி கட்சிகள் நம்பிக்கை வைத்து உள்ளன. இந்த பிரச்சினையில் சரத்பவாரும் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே இது விவாதத்துக்குரிய பிரச்சினை அல்ல" என்றார்.


Next Story