கேரள கிறிஸ்தவ திருச்சபையில் 2 குழுக்களின் மோதலை தீர்க்க மோடி நடவடிக்கை; பினராயி விஜயன் வரவேற்பு


கேரள கிறிஸ்தவ திருச்சபையில் 2 குழுக்களின் மோதலை தீர்க்க மோடி நடவடிக்கை; பினராயி விஜயன் வரவேற்பு
x
தினத்தந்தி 29 Dec 2020 6:38 PM GMT (Updated: 29 Dec 2020 6:38 PM GMT)

டெல்லியில் பிரதமர் மோடி, ஆர்த்தோடக்ஸ் பிரிவினருடன் கடந்த திங்கட்கிழமையும், யாக்கோபிய பிரிவினருடன் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருச்சூர், 

கேரளாவில் உள்ள கிறிஸ்தவ திருச்சபையான மலங்கரா திருச்சபை 2 குழுக்களாக செயல்படுகிறது. ஆர்த்தோடக்ஸ் பிரிவு, யாக்கோபிய பிரிவு என்ற அந்த குழுக்கள் இடையே 1,000 தேவாலயங்களையும், அவற்றின் சொத்துகளையும் வைத்திருப்பது தொடர்பாக மோதல் உள்ளது. இந்த மோதலை தீர்ப்பதற்கு பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இது தொடர்பாக டெல்லியில் அவர் ஆர்த்தோடக்ஸ் பிரிவினருடன் கடந்த திங்கட்கிழமையும், யாக்கோபிய பிரிவினருடன் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை இணக்கமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்ததாக இரு குழுக்களும் கூறி உள்ளன.

இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “மலங்கரா திருச்சபையின் இரு பிரிவுகள் இடையேயான கவலைக்குரிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, பிரதமர் தலையிட எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது. பிரதமரின் தலையீட்டில் எந்த அரசியலும் இருப்பதாக நான் கருதவில்லை” என பதில் அளித்தார். இரு குழுக்களுடனும் ஏற்கனவே பினராயி விஜயனும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story