மும்பையில் ஜனவரி 15-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; மாநகராட்சி அறிவிப்பு


மும்பையில் ஜனவரி 15-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Dec 2020 10:50 PM GMT (Updated: 29 Dec 2020 10:50 PM GMT)

மும்பையில் ஜனவரி 15-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை என்று மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் இறுதி வாரத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் திடீர் முடிவாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு எடுத்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்தது.

இதன்படி மராட்டியத்தில் கிராமப்புறங்களிலும், பல நகர்புறங்களிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் மும்பை, தானே போன்ற நகரங்களில் பள்ளிகள் திறப்பு டிசம்பர் 31-ந் தேதி (நாளை) வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மும்பை மாநகராட்சி நேற்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜனவரி 15-ந் தேதி வரை மும்பையில் உள்ள அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என்றும், பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் 2-வது கொரோனா அலை பரவலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சி தெரிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் மும்பையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆனால் மும்பையில் உள்ள அமெரிக்க உள்ளிட்ட இதர தூதரக பள்ளிகளை ஜனவரி 18-ந் தேதி திறக்கலாம் என அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அரசு, மாநகராட்சி, தனியார் பள்ளிகள் திறப்பு தேதி தெரிவிக்கப்படவில்லை.

Next Story