டெல்லி போராட்ட களத்தில் லாரியை வீடாக மாற்றிய விவசாயி


டெல்லி போராட்ட களத்தில் லாரியை வீடாக மாற்றிய விவசாயி
x
தினத்தந்தி 3 Jan 2021 5:01 AM GMT (Updated: 3 Jan 2021 5:01 AM GMT)

சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் மட்டு என்ற விவசாயி, தனக்கு சொந்தமான கண்டெய்னர் லாரியை சொகுசு வீடாக மாற்றியமைத்துள்ளார்.

புதுடெல்லி

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரம் கூடாரங்களை அமைத்தும், டிராக்டர் டிரைலர்கள் மீது தார்பாய் போட்டு மூடி வீடு போன்று மாற்றியும் இரவு நேரங்களில் அதில் தூங்குகின்றனர். பலர் போராட்டக்களத்திலேயே கம்பளி விரித்து தூங்குகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு, உடைகளை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர். 

சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் மட்டு என்ற விவசாயி, தனக்கு சொந்தமான கண்டெய்னர் லாரியை சொகுசு வீடாக மாற்றியமைத்துள்ளார்.  இது பற்றி அந்த விவசாயி கூறுகையில், “ அமெரிக்காவில் இருக்கும் எனது மூத்த சகோதரர் அறிவுறுத்தலின் பேரில், விவசாயிகளுக்காக சேவை புரிய டிசம்பர் 2 ஆம் தேதி நான்  இங்கு வந்தேன். 

எனது அனைத்து பணிகளையும் விட்டுவிட்டு 7 நாட்களாக இங்கு போராட்டத்தில் கலந்து கொண்டேன். எனக்கு வீடு மற்றும் குடும்பத்தினர் நினைவு வந்தது. எனவே, ஏன் டிரக்கை வீடாக மாற்றக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது” என்றார். 

விவசாயி ஹர்ப்ரீத் சிங் மட்டுவின் தற்காலிக இல்லத்தில், அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. அதாவது, சொகுசு இருக்கைகள், தொலைக்காட்சி, மொபைல் சார்ஜிங் வசதி, கழிப்பறை போன்றவை உள்ளன.  வெறும் ஒன்றரை நாளில், லாரியை தற்காலிக இல்லமாக மாற்றியமைத்ததாக விவசாயி ஹர்பிரீத் சிங் மட்டு கூறினார்.  சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு தேநீர், பகோடா போன்றவைகளை 24 மணி நேரம் வழங்கி  சேவையாற்றி வருவதாகவும் ஹர்ப்ரீத் சிங் மட்டு கூறினார். 


Next Story