வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2021 5:48 AM GMT (Updated: 3 Jan 2021 5:48 AM GMT)

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 39-வது நாளாக நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 39-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய 6-வது கட்ட பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் 50 சதவீத கோரிக்கைகளுக்கு முடிவு காணப்பட்டதாக மத்திய அரசு கூறியது.

இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் முக்கியமாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவை குறித்து பேசப்படுகிறது.

டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையை அதிகமாக நம்பியுள்ளனர். இதில் தங்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என கருதி வரும் அவர்கள், இதன் மூலம் தங்கள் காத்திருப்பு விரைவில் முடிவு பெறும் என எதிர்பார்த்து உள்ளனர்.

அதேநேரம் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். குறிப்பாக 6-ந் தேதி மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி மற்றும் அரியானாவில் வர்த்தக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்கள் அடைப்பு உள்பட பல நடவடிக்கைகளுக்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

Next Story