உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி


உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி
x
தினத்தந்தி 3 Jan 2021 8:11 PM GMT (Updated: 3 Jan 2021 8:11 PM GMT)

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜைடஸ் கேடிலா தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

மத்திய உயிர் தொழில்நுட்பத்துறையும், ஜைடஸ் கேடிலா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை தயாரித்து உள்ளன. இந்த தடுப்பூசி ஏற்கனவே முதல் மற்றும் 2–ம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்திருக்கிறது.

1000–க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட இந்த பரிசோதனையில் இந்த தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் சக்தி உடையது என கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பான இடைக்கால அறிக்கையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு (டி.சி.ஜி.ஐ.) அனுப்பி வைத்து, 3–ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி கேட்கப்பட்டது.

இந்த இடைக்கால அறிக்கையை ஆய்வு செய்த துறைசார்ந்த வல்லுனர் குழு, இந்த தடுப்பூசியை 3–ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதிக்கலாம் என டி.சி.ஜி.ஐ–க்கு பரிந்துரைத்தது. அதன்படி ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசியை 3–ம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்த டி.சி.ஜி.ஐ. அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து உயிர் தொழில்நுட்பத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசியை 3–ம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்த டி.சி.ஜி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 26 ஆயிரம் இந்திய தன்னார்வலர்களிடம் இந்த தடுப்பூசி செலுத்தி சோதிக்கப்படும்’ என கூறப்பட்டு உள்ளது.


Next Story