டெல்லியில் 41–வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு; வேளாண் மந்திரி நம்பிக்கை


டெல்லியில் 41–வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்:  அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு; வேளாண் மந்திரி நம்பிக்கை
x
தினத்தந்தி 5 Jan 2021 8:35 PM GMT (Updated: 5 Jan 2021 8:35 PM GMT)

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் நேற்று 41–வது நாளாக தொடர்ந்தது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படலாம் என்று வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதுடெல்லி,

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் நேற்று 41–வது நாளாக தொடர்ந்தது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படலாம் என்று வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக, கடுங்குளிருடன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தை தொடர்கின்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தலைமையிலான அதிகாரிகள் குழுவுக்கும் இடையே கடந்த 30–ந் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. விவசாய கழிவுகளை எரிப்பதற்கு தண்டனை இல்லை, மின்சார மானியம் தொடரும் என்பதில் உடன்பாடு ஏற்பட்டது.

ஆனால் நேற்று முன்தினம் நடைபெற்ற 7–வது சுற்று பேச்சுவார்த்தையில் மீண்டும் தேக்கம் ஏற்பட்டது. எந்த முடிவும் எட்டப்படாமலே அது முடிவடைந்தது.

இந்த ஆண்டின் முதல் பேச்சுவார்த்தையாக நடைபெற்ற இதில், ஆரம்பம் முதலே ஒரு உடன்பாடு ஏற்படும் சூழல் காணப்படவில்லை. காரணம், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதில் விவசாயிகள் விடாப்பிடியாக இருந்தனர். அதேநேரம், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது சாத்தியமே இல்லை என்று அரசு தெளிவாக கூறிவிட்டது. இந்நிலையில், மீண்டும் நாளை மறுநாள் (ஜன.8) சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆக, நேற்று விவசாயிகள் போராட்டம் 41–வது நாளாக தொடர்ந்தது. கொட்டிய மழையும் அவர்கள் தீவிரத்தை குறைக்கவில்லை.

7–வது சுற்று பேச்சுவார்த்தை முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், ‘‘விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், அரசு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. பிரதானமாக 2 வி‌ஷயங்கள் சார்ந்து இந்த பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. எனவே, வருகிற 8–ந் தேதி மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அரசின் மீது விவசாயிகள் நம்பிக்கை வைத்திருப்பதால்தான், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம், விவசாயிகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. அவர்களுடன் எந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்க தயாராக இருக்கிறது. விவசாயிகளுக்கும், அரசுக்கும் இடையே விரைவில் ஓர் உடன்பாடு எட்டப்படும் என்று நான் நம்புகிறேன்’’ என்றார்.

இதற்கிடையில் பாரதீய கிசான் யூனியன் தலைவர் மகேந்திரசிங் திகாயத் கூறுகையில், எல்லாம் அரசின் கையில்தான் இருக்கிறது, அரசு நினைத்தால் ஒரு தீர்வை எட்ட முடியும். அதுவரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று கூறினார்.


Next Story