2014 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி; காங்கிரஸ் தலைமை பற்றி பிரணாப் முகர்ஜி புத்தகத்தில் புதிய தகவல்


2014 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி; காங்கிரஸ் தலைமை பற்றி பிரணாப் முகர்ஜி புத்தகத்தில் புதிய தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2021 10:46 PM GMT (Updated: 5 Jan 2021 10:46 PM GMT)

2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற தோல்விக்கு, மக்களை கவர்ந்திழுக்கும் வசீகர தலைமை இல்லாததை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ளாததே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி,

2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற தோல்விக்கு, மக்களை கவர்ந்திழுக்கும் வசீகர தலைமை இல்லாததை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ளாததே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு தனது மறைவுக்கு முன்பாக எழுதிய ‘தி பிரெசிடென்சியல் இயர்ஸ் 2012– 2017’ என்ற நினைவுக்குறிப்பு புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் விவரம் வருமாறு:–

2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில், அரைமணிக்கு ஒருமுறை அதன் போக்கை தெரிவிக்குமாறு என்னுடைய உதவியாளரிடம் கூறியிருந்தேன். மாலையில் முடிவுகள் அனைத்தும் வெளியான நிலையில், மக்களின் தெளிவான தீர்ப்பு குறித்து நான் பெரிதும் நிம்மதி அடைந்தேன். ஆனால் எனது முந்தைய கட்சியின் பின்னடைவில் ஏமாற்றம் அடைந்தேன்.

காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில்தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. காங்கிரஸ் என்பது, மக்களின் வாழ்வோடு இணைந்த ஒரு தேசிய அமைப்பு. சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் அதன் எதிர்காலம் குறித்த அக்கறை இருக்கும்.

காங்கிரசின் தோல்விக்கு, மக்களை கவர்ந்திழுக்கும் வசீகர தலைமை இல்லாததை கட்சி புரிந்துகொள்ளாததே காரணம். நேரு போன்ற மாபெரும் தலைவர்கள், பாகிஸ்தானை போலில்லாமல் ஒரு வலுவான, நிலையான நாடாக இந்தியாவை உருவாக்கினர். அவர்களை போன்ற அசாதாரண தலைவர்கள் இல்லாமல், காங்கிரஸ் ஒரு சராசரி அமைப்பாகிவிட்டது.

எனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் பிரதமர் மோடியுடன் எனக்கு சுமுகமான உறவு இருந்தது. ஆனால் எங்கள் சந்திப்பின்போது, கொள்கை சார்ந்த வி‌ஷயங்களில் எனது அறிவுரையை அவருக்கு கூற தயங்கியதில்லை.

ஆனால் 2014–19–ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தனது முதலாவது ஆட்சி காலத்தில், நாடாளுமன்றம் சீராகவும் முறையாகவும் செயல்படுவதை உறுதிப்படுத்த தவறிவிட்டது. ஆனால் அப்போது எதிர்க்கட்சியும் பொறுப்பற்ற முறையில்தான் செயல்பட்டது. பிரதமர் மோடி, நாடாளுமன்ற செயல்பாடுகளில் பங்கேற்பது முக்கியம்.

அவர் 2015 டிசம்பரில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துக்கூற திடீரென லாகூர் சென்றது அப்போதைய சூழ்நிலையில் தேவையில்லாதது. கொள்கை சார்ந்த வெளிநாட்டு கொள்கையை கொண்டிருந்திராத மோடியிடம் இது எதிர்பார்க்கக்கூடியதே. சீன அதிபருடன் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்ததும் அப்படித்தான்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பாக மோடி அதுகுறித்து என்னிடம் விவாதிக்கவில்லை. அம்மாதிரியான அறிவிப்பை திடீரென வெளியிடுவதே சரி. எனவே நான் அதுகுறித்து எதிர்பார்க்கவில்லை. அதேநேரம், அந்த முடிவு குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிறகு அவர் என்னிடம் நேரில் வந்து விளக்கி கூறினார்.’   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story