வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் 11-ந்தேதி விசாரணை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Jan 2021 12:00 AM GMT (Updated: 6 Jan 2021 7:28 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது வருகிற 11-ந்தேதி விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

வேளாண்மையை பொதுப்பட்டியலில் சேர்க்க வகைசெய்த 1954-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வேளாண்மையை பொதுப்பட்டியலில் சேர்க்க வகைசெய்த 1954-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்துக்கு மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் விவசாய சங்கத் தலைவர்களுடான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றம் இல்லையே? என கேட்டனர்.

அதற்கு மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சுமுகத் தீர்வு எட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றார்.

உடனே நீதிபதிகள், தற்போது நிலவும் சூழலைப் புரிந்துகொண்டிருக்கிறோம். விவசாய சங்கத் தலைவர்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கவே விரும்புகிறோம். அட்டார்னி ஜெனரல் தெரிவித்தால் இந்த மனுக்கள் மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு (ஜனவரி 11) தள்ளிவைக்கிறோம் என தெரிவித்தனர்.

மேலும், வேளாண் சட்டங்களை எதிர்த்து வக்கீல் சர்மா தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

Next Story