வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம் + "||" + Farmers protest against agricultural laws continues for 43rd day in Delhi
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 43-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
எனவே இரு தரப்பினரும் 8-ந்தேதி (நாளை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் தீர்வு எட்டப்படும் என மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க தலைநகரில் நடந்துவரும் விவசாயிகளின் போராட்டம் எவ்வித தொய்வும் இன்றி வீரியமுடன் தொடர்கிறது. டெல்லியில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகவும் குளிரான ஜனவரி மாதத்தை டெல்லிவாசிகள் இந்த ஆண்டு அனுபவிக்கிறார்கள். மழையும் பெய்து வருவதால் குளிர் மேலும் அதிகரித்து வருகிறது.
இப்படி உடல் நலத்துக்கு மிகுந்த அச்சுறுத்தல் இருந்தபோதும், விவசாயிகளின் மன உறுதிக்கும், போராட்டத்துக்கும் எத்தகைய பின்னடைவும் ஏற்படவில்லை. அவர்கள் வழக்கம் போல தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அரசுடனான பேச்சுவார்த்தையில் எத்தகைய தீர்வும் எட்டப்படாததால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லியில் பல்வேறு சாலைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் டெல்லிவாசிகளுக்கு மாற்று சாலைகளை போக்குவரத்து போலீசார் அறிவித்து வருகின்றனர். கடும் குளிரிலும், பலத்த மழைக்கு இடையேயும் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி எல்லைகளில் பெரும் பரபரப்பு நீடித்து வருகிறது.
டெல்லி திக்ரி எல்லையை காலி செய்யுமாறு போலீசார் ஒட்டியுள்ள எச்சரிக்கை சுவரொட்டிகளுக்கு, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.