டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி; எல்லை பகுதிகளில் போலீஸ் குவிப்பு


டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி; எல்லை பகுதிகளில் போலீஸ் குவிப்பு
x

டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், சிங்கு எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்த உள்ள நிலையில், சிங்கு உள்ளிட்ட எல்லை பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 43-வது நாளாக நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

எனவே இரு தரப்பினரும் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் தீர்வு எட்டப்படும் என மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.  இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் அணி திரண்டு இன்று டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.  இதன்படி, டெல்லியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உள்பட டெல்லியின் நான்கு எல்லைகளில் இருந்தும் இந்த பேரணி இன்று நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு, வன்முறை சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  
இதேபோன்று, முக்கிய பகுதியான சிங்கு எல்லையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.  விவசாயிகளின் டிராக்டர் பேரணியை முன்னிட்டு அரியானாவில் உள்ள குண்ட்லி-மனேசர்-பல்வால் சுங்க சாவடி பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Next Story