காஷ்மீரில் 4 நாள்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடக்கம்


காஷ்மீரில் 4 நாள்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 7 Jan 2021 11:29 AM GMT (Updated: 7 Jan 2021 11:29 AM GMT)

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை, 4 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 ஆம் தேதி முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது. ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையிலும், மொகல் சாலையிலும் பனி மூடியதால் பிற பகுதிகளிலிருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட விமான ஓடுதளம் வரை அனைத்துப் பகுதிகளும் பனியால் மூடப்பட்டிருந்தது. விமான ஓடுதளத்தில் படர்ந்திருந்த பனியை அகற்றும் பணியாலும், மோசமான வானிலையாலும் கடந்த நான்கு நாள்களுக்கு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

விமான ஓடுதளத்தை சரி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று விமான ஓடுதளம் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் காஷ்மீரில் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

Next Story