மும்பை தாக்குதல் சதிகாரர் லக்விக்கு 15 ஆண்டு சிறை - பாகிஸ்தான் கோர்ட்டுஅதிரடி தீர்ப்பு


மும்பை தாக்குதல் சதிகாரர் லக்விக்கு 15 ஆண்டு சிறை - பாகிஸ்தான் கோர்ட்டுஅதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 8 Jan 2021 11:39 PM GMT (Updated: 8 Jan 2021 11:39 PM GMT)

மும்பை தாக்குதல் சதிகாரர் ஜாகி உர் ரகுமான் லக்விக்கு பயங்கரவாத நிதி உதவி வழக்கில் 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

லாகூர்,

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து, துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

2008-ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதல்களை, பாகிஸ்தானில் இருந்துகொண்டு மூளையாக செயல்பட்டு நடத்திய சதிகாரர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியான ஜாகி உர் ரகுமான் லக்வி (வயது 61) ஆவார்.

இந்த வழக்கில் அவர் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பஞ்சாப் மாகாண பயங்கரவாத தடுப்பு போலீஸ் படை அவரை கைது செய்தது.

இவர் பயங்கரவாத செயல்களை நடத்துவதற்காக பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து, அது தொடர்பான வழக்கின் விசாரணை லாகூர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து லாகூர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டு நீதிபதி இஜாஸ் அகமது பட்டர் நேற்று தீர்ப்பு அளித்தார்.

லக்விக்கு 3 சட்ட பிரிவுகளின் கீழ் தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் 3 பிரிவுகளிலும் மேலும் தலா 6 மாதம் சிறை தண்டனை அனுவிக்க வேண்டும். தீர்ப்பை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

லக்வி, ஐ.நா. சபையால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிட தகுந்தது.

Next Story