மராட்டியத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; பண்ணை கோழிகளை அழிக்க உத்தரவு


மராட்டியத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; பண்ணை கோழிகளை அழிக்க உத்தரவு
x
தினத்தந்தி 11 Jan 2021 4:46 AM GMT (Updated: 11 Jan 2021 4:46 AM GMT)

மராட்டியத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

புனே,

நாட்டின் வடக்கு மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது.  கேரளாவிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லியில் கடந்த சில நாட்களாக 200க்கும் மேற்பட்ட காகங்கள் மற்றும் வாத்துகள் போன்ற பறவையினங்கள் இறந்துள்ளன.  இதனை தொடர்ந்து பூங்காவில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன.  பார்வையாளர்களுக்கு தடை விதித்து, பூங்கா மூடப்பட்டது.

இதனால் பறவை காய்ச்சல் பரவி விட்டனவா? என அறிய அவற்றின் மாதிரிகளை டெல்லி அரசு அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.  இதுபற்றி விரைவு பொறுப்பு குழு ஒன்றை அனுப்பி ஆய்வு மேற்கொள்ளும்படி டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டெல்லியில் நேற்றும் காகம் மற்றும் வாத்து ஆகிய பறவையினங்கள் உயிரிழந்து கிடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன் மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டத்தில் முரும்பா கிராமத்தில் 800 கோழி குஞ்சுகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தன.  அவற்றின் ரத்த மாதிரிகளை மாவட்ட நிர்வாகம் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது.

இதன் முடிவுகள் இன்று வெளிவந்தன.  அதில், பறவை காய்ச்சலால் அவை உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முக்லிகர் கூறியுள்ளார்.  

இதனால், அந்த கிராமத்தில் ஒரு கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளில் உள்ள பறவைகளை அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.  10 கி.மீ. சுற்றளவில் கோழி விற்பனை மற்றும் கொள்முதல் ஆகியவற்றுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கிராம மக்கள் அனைவருக்கும் வைரசால் ஏற்பட்ட தொற்று பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது என ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.  மராட்டியத்தில் பறவை காய்ச்சல் எதிரொலியாக முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

Next Story