விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்; காங்கிரஸ் கோரிக்கை


விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்;  காங்கிரஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2021 11:05 PM GMT (Updated: 11 Jan 2021 11:05 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் காரணமாக, விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

சுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் காரணமாக, விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துகள் தொடர்பாக, காங்கிரஸ் கட்சி தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை மீண்டும் மீண்டும் தோல்வி அடைவது குறித்து சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது. தீர்வு காண இயலாத மத்திய அரசின் நிலை பற்றி ஏமாற்றம் தெரிவித்துள்ளது. சுதந்திர இந்தியாவின் 73 ஆண்டு கால வரலாற்றில் தனது ஆணவப்போக்கால் எந்த அரசும் இதுபோன்று அம்பலப்பட்டது இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு விமர்சனம் காரணமாக, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். உயிரிழந்த 65 விவசாயிகளின் குடும்பத்தினரிடம் மட்டுமின்றி, நாட்டில் உள்ள 62 கோடி விவசாயிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.

விவசாயிகள் போராட்டத்துக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் ஆகியோர்தான் பொறுப்பு. அவர்கள் விவசாயிகளை டெல்லிக்கு வரவிடாமல் தடுத்தனர். அவர்களது அரசுகள், சாலைகளில் குழி தோண்டி, டெல்லியை சுற்றி தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை தடுத்தன.

அவர்களின் தேசவிரோத செயல்பாடுகளை சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் கொள்ள வேண்டும். அரசு கருவூலத்துக்கு இழப்பும், பொது சொத்துகளுக்கு சேதமும் ஏற்படுத்தியதற்காக அவர்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களில் 18 திருத்தங்களை செய்ய மோடி அரசு தயாராக உள்ளது. 

அப்படியானால், தவறான அந்த சட்டங்களை ஏன் நீக்கக்கூடாது? போராடும் விவசாயிகளுடன் பிரதமரே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதற்கு குறைவான எதையும் விவசாயிகள் ஏற்கமாட்டார்கள். பிரதமரே முன்வந்து விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டும். பெரும் பணக்காரர்கள் ஆதரவுநிலையை கைவிட்டு, 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.



Next Story