இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விலை, ரூ.200 முதல் ரூ.295 வரை இருக்கும் - மத்திய சுகாதாரத்துறை தகவல்


இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விலை, ரூ.200 முதல் ரூ.295 வரை இருக்கும் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 12 Jan 2021 1:18 PM GMT (Updated: 12 Jan 2021 1:18 PM GMT)

கொரோனா தடுப்பூசியின் விலை, இந்தியாவில் ரூ.200 முதல் ரூ.295 வரை இருக்கும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் டெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், வரும் 14 ஆம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், 100% கொரோனா மருந்துகள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் தற்போது 2,16,558 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அவர் கேரளா, மகாராஷ்டிரா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே 50,000க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் சீரம் நிறுவனத்திடம் இருந்து 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதன் ஒரு டோஸ் விலை 200 ரூபாய் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் அதன் ஒரு டோஸ் விலை 295 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரத் பயோடெக் நிறுவனம் சுமார் 16 லட்சம் தடுப்பூசிகளை இலவசமாக கொடுத்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விலை, ரூ.200 முதல் ரூ.295 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை பெற்றுள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் நன்கு பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை மற்றும் செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. 

Next Story