கேரள மாநிலத்திற்கு முதற்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்


கேரள மாநிலத்திற்கு முதற்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்
x
தினத்தந்தி 12 Jan 2021 5:03 PM GMT (Updated: 12 Jan 2021 5:03 PM GMT)

கேரள மாநிலத்திற்கு முதற்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நாளை சென்றடைய உள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்டக்குழுவின் ஆலோசனைக்குப்பின், வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. புனேவில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

அந்த வகையில் கேரள மாநிலத்திற்கு முதற்கட்டமாக 4.33 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் விமானம் மூலமாக வரும் ஜனவரி 13 ஆம் தேதி(நாளை) திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா பேசுகையில், “கேரளாவிற்கு வரவிருக்கும் 4,33,500 தடுப்பூசிகளில், திருவனந்தபுரத்திற்கு 1,34,000 தடுப்பூசிகளும், எர்ணாகுளத்திற்கு 1,80,000 தடுப்பூசிகளும், கோழிக்கோடு 1,19,500 தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன. கோழிகோடில் இருந்து சுமார் 1,100 தடுப்பூசிகள் மகேவில் விநியோகிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் கேரளாவில் முதல் கட்டமாக 133 மையங்களில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும் என்றும் அனைத்து மையங்களிலும் தடுப்பூசிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதுவரை, 3,62,870 பேர் தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அதில் அரசுத் துறையில் 1,70,259 பேரும், தனியார் துறையில் 1,92,611 பேரும் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story