கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாக மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் - அரவிந்த் கெஜ்ரிவால்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Jan 2021 10:01 AM GMT (Updated: 13 Jan 2021 10:01 AM GMT)

மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் வருகிற 16-ந் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. புனேவில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கும், பின்னர் 50 வயதை கடந்தவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கும் இந்த தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். அவ்வாறு மத்திய அரசு இலவசமாக வழங்காவிட்டால், தேவைப்படும் பட்சத்தில் டெல்லி மக்களுக்கு இலவசமாக டெல்லி அரசே வழங்கும். கொரோனா தடுப்பூசி குறித்து முழுமையாகத் தெரியாமல் யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கொரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களை ஊக்கப்படுத்த புதியதாக நலத்திட்டம் தொடங்க உள்ளோம். அந்த வகையில் இந்தப் பணியில் உயிரிழந்த மருத்துவர் ஹிதேஸ் குடும்பத்தாருக்கு டெல்லி அரசு கூறியபடி 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கப்பட்டது. மருத்துவர் ஹிதேஸ் மனைவி நன்கு படித்தவர் என்பதால், அவருக்கு டெல்லி அரசு சார்பில் பணி வழங்கப்படும்” என்று கூறினார். 

Next Story