மேற்கு வங்காளத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, தடுப்பூசி வேனை மறித்த மந்திரி


மேற்கு வங்காளத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, தடுப்பூசி வேனை மறித்த மந்திரி
x
தினத்தந்தி 13 Jan 2021 6:45 PM GMT (Updated: 13 Jan 2021 6:45 PM GMT)

தடுப்பூசி எடுத்துச் சென்ற ஒரு வேன், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

புர்டான்,

நாடு முழுவதும் வருகிற 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்த முகாம்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தடுப்பூசி எடுத்துச் சென்ற ஒரு வேன், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய அவர்கள் இந்த வேனை மறித்தனர். அந்த மாநில நூலகத்துறை மந்திரி சித்திகுல்லா சவுத்ரி தலைமையில் புர்பா பர்தமான் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து இந்த போராட்டம் நடந்தது.

தகவல் அறிந்த போலீசார், தடுப்பூசி வேனை ஒரு கிராம சாலையின் வழியாக வேறு பாதையில் திருப்பிவிட்டனர். பின்னர் அந்த வேன், கொல்கத்தா தடுப்பூசி முகாமுக்கு சென்றது. அங்கிருந்து பிற பகுதிகளுக்கு தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டன.

இதுபற்றி மந்திரி சவுத்ரி கூறும்போது, “அது தடுப்பூசி வேன் என்பதை அறிந்து மறிக்கவில்லை என்றும், அது தடுப்பூசி வேன் என்பது தெரிந்ததும் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டது” என்றும் தெரிவித்தார்.


Next Story