மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் இணைய வேண்டும்; திரிணாமுல் வேண்டுகோள்

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் இணைய வேண்டும்; திரிணாமுல் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Jan 2021 7:18 PM GMT (Updated: 13 Jan 2021 7:18 PM GMT)

மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்- பா.ஜ.க. கட்சிகள் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்- பா.ஜ.க. கட்சிகள் இடையே தீவிர மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் மூத்த எம்.பி. சவுகத ராய், ‘இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் உண்மையிலேயே பா.ஜ.க.வுக்கு எதிரானவர்கள் என்றால், அவர்கள் பா.ஜ.க.வின் மதவாத, பிளவு அரசியலுக்கு எதிரான மம்தா பானர்ஜியின் போராட்டத்தில் இணைய வேண்டும். பா.ஜ.க.வுக்கு எதிரான மதசார்பற்ற அரசியலின் உண்மையான முகம் மம்தாதான்.

மேம்பாட்டை முன்னிறுத்தியே ஆக்கபூர்வமான விமர்சனங்களை திரிணாமுல் முன்வைக்கிறது. மேற்கு வங்காளத்தில் எல்லை தாண்டி கால்நடைகள் கடத்தல் நடைபெறுகிறது என்றால், அதைத் தடுக்க வேண்டியது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை பாதுகாப்பு படையே தவிர, மாநில போலீஸ் அல்ல.

மேற்கு வங்காளத்துக்கு வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பல்வேறு இடங்களுக்குச் சென்று மதிய உணவு உண்டதற்குப் பதிலாக, எல்லைக்குப் போய் எல்லை பாதுகாப்பு படை தனது கடமையை முறையாக செய்கிறதா என்று சரிபார்த்திருக்கலாம்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story