அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட 32 பேர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு; விசாரணை ஒத்திவைப்பு


அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட 32 பேர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு;  விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 13 Jan 2021 8:58 PM GMT (Updated: 13 Jan 2021 8:58 PM GMT)

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை அலகாபாத் ஐகோர்ட்டு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

லக்னோ, 

அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992-ம் ஆண்டு, டிசம்பர் 6-ந் தேதி கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்டது.இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர்ஜோஷி, உமாபாரதி, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிருத்யா கோபால்தாஸ் உள்ளிட்ட 32 பேர் மீது சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, அனைவரையும் விடுதலை செய்து சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அயோத்தியை சேர்ந்த ஹாஜி மக்மூத் அகமது, சையது அக்லாக் அகமது ஆகியோர் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை அவர்கள் சார்பில், அவர்களது வக்கீலான அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயற்குழு உறுப்பினர் ஜபார்யாப் ஜிலானி தாக்கல் செய்திருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:-

இந்த வழக்கில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்யாததால், நாங்கள் மேல்முறையீடு செய்திருக்கிறோம். மேலும், கீழ்கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது நாங்கள் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் என கூறி உள்ளோம். அசலை தாக்கல் செய்யாததால், செய்தித்தாள் துண்டுகள், வீடியோ தொகுப்புகளை சான்றாவணமாக ஏற்க விசாரணை நீதிமன்றம் மறுத்து விட்டது. பாபர் மசூதி இடிப்புக்கான சதி ஆதாரங்களை விசாரணை கோர்ட்டு சரியான கோணத்தில் பார்க்கவில்லை. எனவே அந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் நீதிபதி ராகேஷ் ஸ்ரீவஸ்தவா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, தங்கள் வழக்கு கோப்பில் உள்ள சில குறைபாடுகளை நீக்குவதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று வழக்குதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story