நடிகர் சோனு சூட் உரிமம் இல்லாமல் ஓட்டல் நடத்துகிறார்; ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்


நடிகர் சோனு சூட் உரிமம் இல்லாமல் ஓட்டல் நடத்துகிறார்; ஐகோர்ட்டில் மாநகராட்சி தகவல்
x
தினத்தந்தி 13 Jan 2021 11:34 PM GMT (Updated: 13 Jan 2021 11:34 PM GMT)

நடிகா் சோனு சூட் உரிமம் இல்லாமல் ஓட்டல் நடத்துவதாக மும்பை ஐகோர்ட்டில் மாநகராட்சி கூறியுள்ளது.

மும்பை, 

மும்பை ஜூகு பகுதியில் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இதில் அவர் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டு இருப்பதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் அவர் உரிமம் இன்றி குடியிருப்பு கட்டிடத்தில் ஓட்டல் நடத்துவதாக ஜூகு போலீசில் புகார் அளித்து உள்ளது.இந்தநிலையில் சோனு சூட் மாநகராட்சியின் நோட்டீசை ரத்து செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-நடிகா் சோனு சூட் கட்டிடத்தின் 6-வது மாடியில் 24 ஓட்டல் அறைகளை அமைத்து இருக்கிறார். மேலும் அவர் பலவிதமான சட்டவிரோத கட்டுமான பணிகளை செய்ததால் தான் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

ஏற்கனவே 2 முறை அந்த கட்டிடத்தில் சட்டவிரோத கட்டுமான பணிகள் இடிக்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் ஓட்டல் நடத்த அவர் உரிமமோ அல்லது தொழில்நுட்ப அனுமதியோ பெறவில்லை. இந்த உண்மைகளை மறைத்து அவர் மனு தாக்கல் செய்து உள்ளார். மனுதாரர் சுத்தமான கைகளுடன் இங்கு வரவில்லை.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதற்கு நடிகர் தரப்பு வக்கீல், சோனு சூட் கட்டிடத்தில் அழகுப்படுத்தும் பணியை மட்டுமே மேற்கொண்டு இருக்கிறார், அவர் அந்த கட்டிடத்தை அடகு வைத்து பல நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார் என்றார். எனினும் நீதிபதி அந்த வாதம் சம்மந்தம் இல்லாமல் இருப்பதாக கூறினர். மேலும் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.



Next Story