மத்திய அரசு- விவசாயிகள் இடையேயான 9-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 15 Jan 2021 11:38 AM GMT (Updated: 15 Jan 2021 11:38 AM GMT)

மத்திய அரசு- விவசாயிகள் இடையேயான 9-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் சுமார் 50 நாட்களாக போராடி வருகின்றனர். கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு ஏற்கனவே நடத்திய 8 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.  இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு எதிரான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த உத்தரவு வரும் வரை, இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அத்துடன் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 4 உறுப்பினர் குழு ஒன்றையும் அமைத்து உள்ளது. வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் குறைகளை இந்த குழு முன் தெரிவிக்குமாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அமைத்த இந்த குழு அரசுக்கு ஆதரவான குழு என குற்றம் சாட்டியுள்ள விவசாய அமைப்புகள், எனவே இந்த குழு முன் ஆஜராகமாட்டோம் என அறிவித்தன.

இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 9-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சில மணி நேரங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில்  உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, வரும் 19- ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story