கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 2 தடுப்பூசிகளும் ‘சஞ்சீவனி’யாக கிடைத்துள்ளன; ஹர்சவர்தன் பெருமிதம்


கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 2 தடுப்பூசிகளும் ‘சஞ்சீவனி’யாக கிடைத்துள்ளன; ஹர்சவர்தன் பெருமிதம்
x
தினத்தந்தி 16 Jan 2021 11:06 PM GMT (Updated: 16 Jan 2021 11:06 PM GMT)

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 2 தடுப்பூசிகளும் ‘சஞ்சீவனி’யாக கிடைத்திருப்பதாக சுகாதார மந்திரி ஹர்சவர்தன் பெருமிதத்துடன் கூறினார்.

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசிக்கான இந்தியாவின் காத்திருப்பு முடிவுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு என தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நாடு முழுவதிலும் நேற்று முதல் இந்த 2 தடுப்பூசிகளும் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக போடப்படுகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய இந்த தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். இது நாடு முழுவதும் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் கொரோனாவின் கொடூரத்தை இந்தியாவில் விரைவில் வேரறுக்க முடியும் என்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் இந்த 2 தடுப்பூசிகளும் சஞ்சீவனியாக கிடைத்துள்ளதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் குறிப்பிட்டு உள்ளார். டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடும் நிகழ்வுகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தினம். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முழுவதிலும் நமது பிரதமரால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இதுவாகும்.

கடந்த ஓராண்டாக இந்த தொற்றுக்கு எதிராக தீரத்துடன் போராட நம்மால் முடிந்தது. ஒரு முன்எச்சரிக்கை மற்றும் செயல்திறன்மிக்க நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் இந்தியா மிகச்சிறந்த செயல்பாட்டை காண்பித்தது. உலக அளவில் மிகக்குறைந்த மரண விகிதத்தை கொண்ட நாடாக இந்தியா இருக்கலாம்.

கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில், இந்த 2 தடுப்பூசிகளும் சஞ்சீவனியாக கிடைத்துள்ளன. ஏற்கனவே போலியோ மற்றும் சின்னம்மை நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வென்றிருந்தோம். தற்போது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும் நாம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளோம்.

இந்தியாவை இந்த நிலைக்கு எட்டச்செய்த டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு வீரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்திகள் பரவும் இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் இந்த பொய்களை நம்பாமல், விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை நம்ப வேண்டும். இந்த 2 தடுப்பூசிகளும் பாதுகாப்பானது மட்டுமின்றி, செயல்திறன் மிகுந்ததும் ஆகும்.

இந்த விவகாரத்தில் சரியான தகவல்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்த்து நோய் எதிர்ப்பு போராட்டத்தில் துணை நிற்கும் என நம்புகிறேன்.  இவ்வாறு ஹர்சவர்தன் தெரிவித்தார்.


Next Story