மராட்டியத்தில் 285 மையங்களில் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்


மராட்டியத்தில் 285 மையங்களில் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2021 3:10 AM GMT (Updated: 17 Jan 2021 3:10 AM GMT)

மராட்டியத்தில் 285 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்து உருக்கமாக பேசினார்.

மும்பை,

கண்ணுக்கு தெரியாத ஆட்கொல்லி கொரோனா வைரஸ் உலகையே புரட்டி போட்டு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் நோய் தொற்றால் பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டது. இந்தநிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து புனே சீரம் நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.

இதேபோல ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்தை தயாரித்து இருக்கிறது. இந்த மருந்தை முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு செலுத்தும் பணி நேற்று நாடு முழுவதும் தொடங்கியது. மராட்டியத்தில் 285 மையங்களில் இந்த பணி தொடங்கியது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மும்பை பாந்திரா குர்லா காம்பளக்ஸ் மையத்தில் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர், " இன்று நாம் எடுத்து உள்ள நடவடிக்கை புரட்சிகரமானது. அந்த நாட்கள் தற்போது எனக்கு நடுக்கத்தை தருகின்றன. ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளால் நிறைந்து இருந்தது. எந்த தீர்வும் இல்லாத போது அதை எப்படி எதிர்கொள்வது என்ற மிகப்பெரிய கேள்வி இருந்தது. அந்த சூழலில் எல்லோரும் மிகப்பெரிய அழுத்தத்தில் இருந்தனர். எந்த தீர்வும் இல்லாத போதும் தன்னலம் இன்றி கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த கொரோனா போராளிகளுக்கு நான் தலைவணங்குகிறேன்" என்றார்.

முன்னதாக மும்பை கூப்பர் ஆஸ்பத்திரிக்கு நேற்று அதிகாலை கொரோனா தடுப்பு மருந்து வந்தது. அப்போது சுகாதாரப்பணியாளர் கை தட்டி உற்சாகம் எழுப்பினர். இதேபோல பல இடங்களில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் பூஜை செய்தும், கை தட்டியும், இனிப்புகள் கொடுத்தும் தடுப்பூ ஊசி போட வந்தவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மராட்டியத்தில் ஒரு மையத்திற்கு 100 சுகாதாரப்பணியாளர்கள் வீதம் மொத்தம் 28 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போட உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். இதேபோல நேற்று முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த், ஜே.ஜே. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் மங்கேஷ்வர், டாக்டர் பத்மஜா சரப் ஆகியோரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். இதில் தீபக் சாவந்த் மும்பை கூப்பர் ஆஸ்பத்திரியிலும், மங்கேஷ்கர் மற்றும் பத்மஜா சரப் முறையே ஜே.ஜே. ஆஸ்பத்திரி, ஜால்னா மாவட்ட ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டனர்.

இந்தநிலையில் மாநிலத்துக்கு தேவையான 10 லட்சம் தடுப்பு மருந்து டோஸ்கள் அல்லது 60 சதவீதம் இதுவரை கிடைத்துள்ளது. மீதமுள்ள டோஸ்கள் அடுத்த 10 நாளில் கிடைக்கும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "மாநிலத்தில் தடுப்பூசி போடுவதற்காக 8 லட்சம் சுகாதாரப்பணியாளர்கள் பதிவு செய்து உள்ளனர். எனவே மாநிலத்துக்கு கூடுதலாக 7.5 லட்சம் தடுப்பு மருந்து டோஸ்கள் தேவைப்படுகிறது " என்றார். இதற்கிடையே முதல் நாளில் பதிவு செய்தவர்களில் 65 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story