ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து அழைப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 17 Jan 2021 9:49 AM GMT (Updated: 17 Jan 2021 9:49 AM GMT)

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்தின்  கார்ன்வால் பிராந்தியத்தில் வரும் ஜூன் மாதம் ஜி-7 உச்சிமாநாடு நடைபெறுகிறது. வளர்ந்த பொருளாதாரங்கள் கொண்ட பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7  நாடுகள் கொண்ட ஜி7 மாநாட்டில் விருந்தினராக கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது. 

ஜி 7 மாநாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பருவநிலை மாற்றம், திறந்த வர்த்தகம் போன்ற உலகளாவிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.  ஜி7 மாநாட்டிற்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய போரிஸ் ஜான்சன், ”உலகின் மருந்தகமாக திகழும் இந்தியா, உலகின் தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை ஏற்கனவே விநியோகித்துள்ளது. பெருந்தொற்று சமயத்தில் இந்தியாவும் இங்கிலாந்து நெருக்கமாக ஒருங்கிணைந்து பணியாற்றின”  என்றார். 

வரும் 26ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, தொற்று அதிகரித்ததால் அவர் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story