டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்; தடை கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை


டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்; தடை கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரணை
x
தினத்தந்தி 18 Jan 2021 12:34 AM GMT (Updated: 18 Jan 2021 12:34 AM GMT)

டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணிக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரும் மத்திய அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று விசாரிக்கிறது.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், டெல்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன.

கடந்த 12-ந் தேதி அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், வேளாண் சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 4 நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்தது.

இந்த நிபுணர்களில் ஒருவரான பாரதீய கிசான் சங்க தேசிய தலைவர் பூபிந்தர்சிங் மான், குழுவில் இருந்து திடீரென விலகிக்கொண்டார்.

குடியரசு தினத்தன்று (26-ந் தேதி) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் ஏற்கனவே அறிவித்துள்ளன. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் டிராக்டர் பேரணியோ அல்லது வேறுவகையான போராட்டங்களோ நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி டெல்லி போலீஸ் மூலமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாரதீய கிசான் சங்கம் லோக்சக்தி என்ற விவசாய அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. நிபுணர் குழுவில் மீதியுள்ள 3 பேரையும் நீக்கிவிட்டு வேறு நபர்களை நியமிக்குமாறு கோரியுள்ளது.

இந்தநிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த மனுக்கள், இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இவற்றை விசாரிக்கிறது.

வேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இருந்து பூபிந்தர்சிங் மான் விலகியது, சுப்ரீம் கோர்ட்டின் முயற்சிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே, இதை கருத்தில் கொண்டு, அவருக்கு பதிலாக வேறு நபரை நியமிப்பது உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டு இன்று எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு இடைக்கால தடை விதிப்பது பற்றிய மத்திய அரசின் கோரிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என்றும் முடிவு செய்கிறது.


Next Story