ஏழைகளுக்கு தடுப்பூசி இலவசமாக கிடைக்குமா? - காங்கிரஸ் கட்சி கேள்வி


ஏழைகளுக்கு தடுப்பூசி இலவசமாக கிடைக்குமா? - காங்கிரஸ் கட்சி கேள்வி
x
தினத்தந்தி 18 Jan 2021 7:52 AM GMT (Updated: 18 Jan 2021 7:52 AM GMT)

ஏழைகளுக்கும், நலிவடைந்தோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்குமா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

முதலில் 3 கோடி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும், இதற்கான செலவை மத்திய அரசு ஏற்கும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல் கட்டமாக 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுவதாக அரசு கூறுகிறது. அதே நேரத்தில் எஞ்சிய இந்திய மக்களுக்கு தடுப்பூசி கிடைக்குமா, அதை அவர்கள் இலவசமாக பெறுவார்களா என்பது குறித்து இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 81.35 கோடி மக்கள் மானிய விலையில் தகுதி பெறுகிறார்கள் என்பது அரசுக்கு தெரியாதா? தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இதர பிற்படுத்தப்பட்டோர், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வோர், வறுமைக்கோட்டுக்கு மேலே வாழ்வோர், ஏழைகள் மற்றும் நலிவடைந்தோருக்கு தடுப்பூசி இலவசமாக கிடைக்குமா, இல்லையா?

தடுப்பூசி வழங்கும் திட்டம்தான் என்ன? எப்போது இலவச தடுப்பூசியை அரசு உறுதி செய்யும்? இதற்கெல்லாம், பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க. அரசும் பதில் அளிக்க வேண்டும். இலவச கொரோனா தடுப்பூசி யாருக்கு கிடைக்கும்? எத்தனை பேருக்கு இலவச தடுப்பூசி கிடைக்கும்? இலவச கொரோனா தடுப்பூசி எங்கிருந்து கிடைக்கும்?

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கி புனே இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அரசு ஏன் தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் வைக்கவில்லை?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகளின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்துடன் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு எதற்காக அரசு கூடுதலாக ரூ.95 (ஒரு டோசுக்கு) வழங்க வேண்டும்? இத்தகைய தடுப்பூசியின் விலை இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை விட மலிவாக இருக்கக்கூடாதா? வெளிச்சந்தையில் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.1,000 என்பது எதற்காக?

தடுப்பூசியின் உற்பத்தி செலவு, அதனால் கிடைக்கும் லாபம் பற்றி மருந்து நிறுவனங்களிடம் அரசு வெளிப்படைத்தன்மையை கோர வேண்டும். தடுப்பூசி உருவாக்கம், வெகுஜனங்களுக்கு தடுப்பூசி என்பதெல்லாம் விளம்பர ஸ்டண்ட் அல்ல. இவை மக்கள் சேவையில் முக்கிய மைல்கற்கள்.

நமது முன்கள கொரோனா வீரர்களான டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் மற்றும் பிறருக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதில் இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறபோது, தடுப்பூசி போடுதல் என்பது ஒரு முக்கியமான பொதுச்சேவை, அது அரசியல் அல்லது வணிக வாய்ப்பு அல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story