உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மருத்துவமனை ஊழியர் பலி என்ன காரணம்...?


உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மருத்துவமனை ஊழியர் பலி என்ன காரணம்...?
x
தினத்தந்தி 18 Jan 2021 11:26 AM GMT (Updated: 18 Jan 2021 11:26 AM GMT)

உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மருத்துவமனை ஊழியர் பலி என்ன காரணம்...? என விசாரணை நடைபெற்று வருகிறது.

லக்னோ

 உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 46 வயது ஊழியர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்புக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மொராதாபாத் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பிரிவை கவனிக்கும் வார்டு பாயானா மஹிபால் சிங் ஞாயிற்றுக்கிழமை மாலை நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், அவர் தடுப்பூசி போட்டுக்  கொள்வதற்கு முன்பே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை பிற்பகலில் மஹிபால், கொரோனா தடுப்பூசி போட்டுக்  கொண்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். அவரது மரணம் குறித்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது.

 பிரேத பரிசோதனைக்கு  பிறகே மரணத்துக்கான காரணம் தெரிய வரும். ஆனால், இது கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்டது அல்ல என்று தெரிகிறது. சனிக்கிழமை அவர் இரவுப் பணியில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மொராதாபாத் சுகாதாரத் துறை தலைவர்  கார்க் கூறியுள்ளார்

Next Story