சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன், இந்த வாரம் அபராதம் செலுத்த திட்டம்


சுதாகரன், சசிகலா, இளவரசி
x
சுதாகரன், சசிகலா, இளவரசி
தினத்தந்தி 18 Jan 2021 6:32 PM GMT (Updated: 18 Jan 2021 6:32 PM GMT)

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன் இந்த வாரம் அபராதம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தண்டனை காலம்
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தனிக்கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். அவர்களின் தண்டனை காலம் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.

ஆனால் சசிகலா வருகிற 27-ந் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் ஏற்கனவே கூறியுள்ளது. சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையான ரூ.10 கோடியே 10 ஆயிரத்தை செலுத்திவிட்டனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையின்போது, சுதாகரன் சிறையில் இருந்த நாட்களை கழித்து பார்த்தால், அவரது தண்டனை காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது.

அபராத தொகை
அதனால் பெங்களூரு தனிக்கோர்ட்டு, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், சுதாகரன் அபராதத்தொகையை செலுத்திய உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டு ஒரு மாதமாகியும் சுதாகரன் தரப்பினர் இதுவரை அபராதத்தொகையை செலுத்தவில்லை. இந்த நிலையில் சுதாகரன் தரப்பினர் இந்த வாரத்திற்குள் அபராதத்தொகையை செலுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story