டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி: போலீசார் முடிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


டெல்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி:  போலீசார் முடிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Jan 2021 9:35 PM GMT (Updated: 18 Jan 2021 9:35 PM GMT)

டெல்லியில் குடியரசு தினத்தன்று பிரமாண்ட டிராக்டர் பேரணியில் விவசாயிகளை அனுமதிப்பது பற்றி போலீசார்தான் முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ள நிலையில், அவர்களை டெல்லிக்குள் அனுமதிப்பது குறித்து போலீசார்தான் முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் குடியரசு தினத்தில் டெல்லிக்குள் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த பேரணியால் அரசு சார்பில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படும் என கூறியுள்ள மத்திய அரசு, எனவே இந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய அரசின் சார்பில் வாதங்களை எடுத்துக்கூறிய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘டெல்லிக்குள், அதுவும் குடியரசு தினத்தின்போது 5 ஆயிரம் பேர் நுழைய முற்படுவது சட்டவிரோதம்’ என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து போலீசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு முடிவு செய்ய வேண்டும். இதில் முதலில் முடிவு எடுக்க வேண்டியது சுப்ரீம் கோர்ட்டு அல்ல என்றார்.

இதையடுத்து அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவு மேலும் உதவியாக இருக்கும் என தெரிவித்ததார்.

உடனே தலைமை நீதிபதி, சட்டப்படி முடிவெடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதை சுப்ரீம் கோர்ட்டு கூற வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

மீண்டும் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ‘முன்னெப்போதும் இல்லாத சூழலை எதிர்கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது’ என்றார்.

இதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ‘வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தலையீடு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த விவகாரத்திலும் சுப்ரீம் கோர்ட்டு தலையிடவில்லை. போராட்டம் தொடர்பாக மட்டுமே விசாரித்து வருகிறோம்’ என்று கூறினார்.

பின்னர், டெல்லிக்குள் யாரெல்லாம் வர வேண்டும், யாரெல்லாம் வரக்கூடாது என்பதை சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்வதில்லை என கூறிய தலைமை நீதிபதி,. இருப்பினும் இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 20-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.


Next Story