டெல்லியில் ‘அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த எங்களுக்கு உரிமை உண்டு’ - விவசாயிகள் அறிவிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 19 Jan 2021 2:20 AM GMT (Updated: 19 Jan 2021 2:20 AM GMT)

டெல்லியில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த தங்களுக்கு அரசியல்சாசன உரிமை இருப்பதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

புதுடெல்லி, 

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரியும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கக்கோரியும் டெல்லியின் எல்லைகளில் கடந்த நவம்பர் 28-ந்தேதி முதல் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

50 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து வருகின்றன. எனவே தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வருகிற 26-ந்தேதி அதாவது குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.

ஆனால் இந்த பேரணியால் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தினவிழா கொண்டாட்டங்கள் மற்றும் ராணுவ அணிவகுப்பு போன்றவற்றுக்கு இடையூறு ஏற்படும் எனக்கூறி, இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, விவசாயிகள் பேரணி சட்டம்-ஒழுங்கு விவகாரம் எனவும், இது குறித்து முடிவெடுக்க அதாவது டெல்லிக்குள் யாரை அனுமதிப்பது என முடிவு செய்வதில் டெல்லி போலீசாருக்கே முதல் அதிகாரம் இருப்பதாகவும் கூறி வழக்கை ஒத்திவைத்தது.

இதனால் 26-ந்தேதி விவசாயிகள் நடத்தும் பேரணிக்கு போலீசாரின் அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த பேரணியை திட்டமிட்டபடி நடத்துவோம் என விவசாயிகள் மீண்டும் அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லி எல்லைகளிலேயே நாங்கள் முடங்கியிருக்கிறோம். நாங்களாக இங்கு அமர முடிவு செய்யவில்லை. மாறாக நாங்கள் டெல்லிக்குள் நுழைவதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறோம். நாங்கள் இந்த டிராக்டர் பேரணியை சட்டம்-ஒழுங்குக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் அமைதியாக நடத்துவோம்.

அமைதியான பேரணி நடத்துவதற்கு எங்களுக்கு அரசியல்சாசன உரிமை இருக்கிறது. அதை நாங்கள் பயன்படுத்தி நிச்சயம் டெல்லிக்குள் நுழைவோம்.

நாங்கள் டெல்லி ராஜபாதையிலோ அல்லது உயர் பாதுகாப்பு மிகுந்த பகுதிகளிலோ பேரணி நடத்தப்போவதில்லை. டெல்லியின் வெளிவட்ட ரிங் ரோட்டில் மட்டுமே பேரணி நடத்துவோம்.

அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ள பகுதிகளுக்கு நாங்கள் செல்லமாட்டோம். இதனால் அரசின் குடியரசு தின அணிவகுப்புக்கு எந்த இடையூறும் நேராது.

எங்கள் டிராக்டர்களில் தேசியக்கொடியும், எங்கள் அமைப்புகளின் கொடியும் இருக்கும். இந்த பேரணியை முடித்து மீண்டும் எங்கள் போராட்டக்களத்துக்கே வந்துவிடுவோம்.

குடியரசு தினத்தில் நடைபெறும் எங்கள் பேரணியால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என டெல்லி போலீசார் நினைத்தால், பேரணிக்கான மாற்று பாதைகளை விவசாய அமைப்புகளிடம் போலீசார் தெரிவிக்கலாம். அப்படி தெரிவித்தால் அது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்.

ஆனால் தலைநகர் டெல்லியில் 26-ந்தேதி டிராக்டர் பேரணி நடத்த வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறோம். இவ்வாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Next Story