ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 19 Jan 2021 9:30 AM GMT (Updated: 19 Jan 2021 9:30 AM GMT)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் குவித்தது, பின்னர் இந்தியா முதல் இன்னிங்சில 336 ரன்கள் சேர்த்தது.

அதனை தொடர்ந்து 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. முகமது சிராஜியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 294 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணிக்கு 328 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரிஸ்பேன் மைதானத்தில் 328 ரன்கள் மிகப்பெரிய இலக்கு என்பது மிகக்கடினம் என்ற நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 

இந்தியா 1.5 ஓவரில் 4 ரன்கள் எடுத்திருக்கும்போது நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது.   

காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது. இதனால் இந்திய அணிக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வெற்றி குறித்து நாம் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர்களின் அயராத உழைப்பும், ஆர்வமும் போட்டி முழுவதும் வெளிப்பட்டது. வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது. எதிர்காலத்திலும் அவர்களுடைய முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story