மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் தனியார் பஸ் உரிமையாளரிடம் ரூ.30 ஆயிரம் பறிப்பு - 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது


அப்துல்காதர்,ரேஷ்மா,ஜீனத்,இக்பால்
x
அப்துல்காதர்,ரேஷ்மா,ஜீனத்,இக்பால்
தினத்தந்தி 19 Jan 2021 1:55 PM GMT (Updated: 19 Jan 2021 1:55 PM GMT)

மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் தனியார் பஸ் உரிமையாளரிடம் ரூ.30 ஆயிரத்தை பறித்த 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மங்களூரு: மங்களூருவில் ‘ஹனிடிராப்’ முறையில் தனியார் பஸ் உரிமையாளரிடம் ரூ.30 ஆயிரத்தை பறித்த 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

ரூ.30 ஆயிரம் பறிப்பு

கேரளாவை சேர்ந்த ஒருவர் மங்களூருவில் தனியார் பஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கும் சூரத்கல்லை சேர்ந்த காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜீனத் முபீன் மற்றும் ரேஷ்மா என்ற பெண்களுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனியார் பஸ் உரிமையாளரிடம் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அந்த பெண்கள், சூரத்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு தனியார் பஸ் உரிமையாளரை அழைத்து சென்றுள்ளனர். 

அந்த வீட்டில் 2 பேர் இருந்தனர். அங்கு வைத்து 2 பெண்கள் உள்பட 4 பேரும் சேர்ந்து தனியார் பஸ் உரிமையாளரை தாக்கி உள்ளனர். பின்னர் 2 பெண்களுடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து, தங்களுக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லை என்றால் 2 பெண்களையும் கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் கொடுப்பதாகவும் மிரட்டி உள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தையும் அவர்கள் பறித்து கொண்டனர். 

4 பேர் கைது

மேலும் அவர்கள் ரூ.5 லட்சம் கொடுக்கவில்லை என்றால், போலீசில் புகார் அளிப்பதாக மிரட்டி உள்ளனர். இதனால் பயந்துபோன தனியார் பஸ் உரிமையாளர், இதுதொடர்பாக சூரத்கல் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ‘ஹனிடிராப்’ முறையில் மிரட்டி பணம் பறித்த ஜீனத் முபின், ரேஷ்மா ஆகிய 2 பெண்கள், கிருஷ்ணாபுராவை சேர்ந்த இக்பால், அப்துல் காதர் நசீப் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த வழக்கில் தொடர்புகொண்ட மேலும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து நேற்று முன்தினம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ரகசியம் காக்கப்படும்

மங்களூரு நகர் சூரத்கல்லில் தனியார் பஸ் உரிமையாளரை ‘ஹனிடிராப்’ முறையில் மிரட்டி ரூ.30 ஆயிரத்தை பறித்த 2 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகிறோம். இவர்கள் கடந்த 3 மாதங்களில் 5 முதல் 6 பேரை ‘ஹனிடிராப்’ முறையில் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. ‘ஹனிடிராப்’ முறையில் யாராவது மிரட்டினால் போலீசில் புகார் அளிக்க வேண்டும். புகார் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். 

அடுக்குமாடி குடியிருப்பில் தான் இந்த ‘ஹனிடிராப்’ நடந்து வருகிறது. இதனால் மங்களூரு நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தகவல்களை பெற்று கொண்டு விசாரித்து வருகிறோம். அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் இதுபோன்ற சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால், அதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

கடும் நடவடிக்கை

மங்களூரு நகரில் தனியார் நிகழ்ச்சிகளில் பறக்கும் கேமரா (டிரோன் கேமரா) பயன்படுத்துவது அதிகரித்து உள்ளது. இது எனது கவனத்திற்கும் வந்துள்ளது. பறக்கும் கேமராக்களை பயன்படுத்துபவர்கள் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாமல் பறக்கும் கேமராக்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story