நட்பு நாடுகளுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் - பிரதமர் மோடி


படம்:  PTI
x
படம்: PTI

நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு நாளை முதல் மானிய விலையில் கீழ் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.

புதுடெல்லி: 

சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவற்றை அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியா அனுமதித்துள்ளது. கடந்த 4 நாட்களாக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.இந்தியாவில் 4 நாட்களில் இதுவரை 4 லட்சத்து 54 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அண்டை மற்றும் முக்கிய நட்பு  நாடுகளிடமிருந்து இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வேண்டும் என கோரிக்கைகள் வந்து உள்ளன. 

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்  கூறப்பட்டு இருப்பதாவது:-

நட்பு நாடுகளின் கோரிக்கைகளுக்கு  விடையளிக்கும் விதமாகவும், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறனைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டுக்கு இணங்க, மனிதர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. பூடான், மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகியவற்றிற்கு நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படும் 

உள்நாட்டு தேவைகளை கருத்தில் கொண்டு வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் நட்பு  நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கும். தடுப்பூசிகளை வழங்குவதற்காக இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸிலிருந்து தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை உறுதிப்படுத்த இந்தியா காத்திருக்கிறது என அதில் கூறப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள டுவிட் செய்தியில் உலகளாவிய சமூகத்தின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நீண்டகால நம்பகமான பங்காளியாக இந்தியா மரியாதைக்குரியதாக உள்ளது. பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளின் விநியோகம் நாளை தொடங்கும், மேலும் பல நாட்களில் வரும் என கூறி உள்ளார்.



Next Story