ஐ.நா. அமைப்பின் அமைதி காப்பாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்


ஐ.நா. அமைப்பின் அமைதி காப்பாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 19 Jan 2021 6:08 PM GMT (Updated: 19 Jan 2021 6:08 PM GMT)

ஐ.நா. அமைப்பின் அமைதி காப்பாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் ஐ.நா. சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலில் எகிப்து நாட்டை சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.  மற்றொருவர் காயமடைந்து உள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ் கூறும்பொழுது, மத்திய ஆப்பிரிக்க குடியரசின் கிடால் பகுதியில் தெசாலித் அருகே சென்று கொண்டிருந்த ஐ.நா. சபை வாகனம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இதில், எகிப்து நாட்டை சேர்ந்த அமைதி காப்பாளர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார்.  மற்றொருவர் காயமடைந்து உள்ளார்.  இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

இதேபோன்று எகிப்து அரசுக்கும் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், அந்நாட்டின் கிளர்ச்சியாளர்கள் நேற்று நடத்திய தாக்குதலில் அமைதி காப்பாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.  ஐ.நா. அமைப்பின் அமைதி காப்பாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா இன்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.  இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 13 மற்றும் 15 ஆகிய நாட்களில் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நடந்த தாக்குதலின் விளைவாக அமைதி காப்பாளர்கள் இரண்டு பேர் பலியானார்கள்.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.

இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் 25ந்தேதி மூன்று அமைதி காப்பாளர்கள் உயிரிழந்தது பற்றியும் இந்தியா நினைவுகூர்கிறது.  ருவாண்டா மற்றும் புருண்டி நாடுகளை சேர்ந்த அந்த அமைதி காப்பாளர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.  காயமடைந்தவர்கள் குணமடைந்து விரைவில் திரும்ப வேண்டி கொள்கிறோம் என தெரிவித்து உள்ளது.

Next Story