வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்புக்குழு ஆலோசனை; விவசாயிகளுடன் நாளை முதல் பேச்சுவார்த்தை நடத்த முடிவு


வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்புக்குழு ஆலோசனை; விவசாயிகளுடன் நாளை முதல் பேச்சுவார்த்தை நடத்த முடிவு
x
தினத்தந்தி 19 Jan 2021 9:13 PM GMT (Updated: 19 Jan 2021 9:13 PM GMT)

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த சிறப்புக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 11-ந்தேதி இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த விவகாரத்தில் 4 பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்றை அமைத்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த குழு முன் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியது.

இந்த குழுவில் வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாதி, பிரபல வேளாண் விஞ்ஞானி அனில் கன்வாத் மற்றும் பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்த குழுவில் இடம்பெற்றிருந்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபிந்தர் சிங் மன், பின்னர் அதில் இருந்து விலகினார். இதன் மூலம் இது மூவர் குழுவாக சுருங்கியது.

இந்த சிறப்புக்குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தங்கள் பணிகள் மற்றும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை பற்றி அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.

பின்னர் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் மற்றும் பிற துறை வல்லுனர்களுடன் 21-ந்தேதி (நாளை), முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக இந்த சிறப்புக்குழுவின் முதல் கூட்டத்தில், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கமாட்டார்கள் என பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.

இதற்கிடையே டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் நேற்று 55-வது நாளாக தொடர்ந்தது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள தங்கள் போராட்டக்களங்களில் வழக்கமான வீரியத்துடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே நடத்திய 9 சுற்று பேச்சுவார்த்தைகள் எந்தவித பலனையும் கொடுக்காத நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று (புதன்கிழமை) 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையிலான மத்திய அரசு பிரதிநிதிகளுடன் 40-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில், 3 வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார திருத்த மசோதா-2020 ஆகியவற்றை திரும்பப்பெறுவது மட்டுமே, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான ஒரே நிகழ்ச்சி நிரலாக இருக்க வேண்டும் என அனைத்திந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு கமிட்டி கூறியுள்ளது.

ஆனால் இந்த வேளாண் சீர்திருத்த சட்டங்களை மத்திய அரசு தைரியமாக கொண்டு வந்திருப்பதாக வேளாண் மந்திரி தோமர் கூறியுள்ளார். இதன் மூலம் இந்த சட்டங்களை திரும்பப்பெறுவதில்லை என்ற முடிவில் மத்திய அரசு உறுதியாக இருப்பதையே காட்டுகிறது. இதனால் இன்றைய பேச்சுவார்த்தையிலும் சுமுக தீர்வு எட்டுவதற்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாகவே உள்ளன.

முன்னதாக இந்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெறுவதாக இருந்தது. பின்னர் கடைசி நேரத்தில் இது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story