தேசிய செய்திகள்

டெல்லியில் நடத்த திட்டமிட்டு உள்ள டிராக்டர் பேரணிக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்; மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் + "||" + Farmers protest live updates: Farmer leaders remain steadfast on Republic Day tractor rally

டெல்லியில் நடத்த திட்டமிட்டு உள்ள டிராக்டர் பேரணிக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்; மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

டெல்லியில் நடத்த திட்டமிட்டு உள்ள டிராக்டர் பேரணிக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்;  மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்
டெல்லியில் நடத்த திட்டமிட்டு உள்ள டிராக்டர் பேரணியை தடை செய்யாமல், அதற்கு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
புதுடெல்லி, 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி குடியரசு தினத்தன்று (26-ந்தேதி) டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் இந்த பேரணிக்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டெல்லிக்குள் பேரணியை அனுமதிப்பது குறித்து டெல்லி போலீசாரும், மத்திய அரசும்தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தது.

இந்த பேரணிக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. மாறாக இந்த பேரணியை தவிர்க்க வேண்டும் என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஜனவரி 26-ந்தேதி நமது குடியரசு தினம். பல்வேறு தியாகங்களுக்குப்பிறகு நாடு விடுதலை அடைந்திருக்கிறது. குடியரசு தினத்தின் கண்ணியத்தை எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்க வேண்டியது விவசாயிகளின் கடமையும் கூட. எனவே இந்த பேரணி முடிவை அவர்கள் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன்’ என கூறியிருந்தார்.

ஆனால் அமைதியான முறையில் இந்த பேரணியை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து தேப கிசான் கமிட்டியின் பொதுச்செயலாளர் அமர்ஜித் சிங் ரர்ரா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இது எங்கள் நாடு. எங்கள் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்காக குரலெழுப்ப எங்களுக்கு அரசியல்சாசன உரிமை உண்டு. எனவே இந்த பேரணிக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என விரும்புகிறோம்.

எங்கள் விவசாய அமைப்புகளின் கொடிகள் மற்றும் தேசியக்கொடியுடன் நாங்கள் டிராக்டர் பேரணி நடத்துவோம். எனவே அவர்கள் எங்களை தாக்கினால், அது தேசியக்கொடியை தாக்குவது ஆகும். இந்த பேரணி நடத்துவதில் இருந்து விவசாயிகளை தடுக்காமல், எங்கள் பேரணிக்கு பாதுகாப்பான தளம் உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

குடியரசு தினத்தன்று நடத்தப்படும் இந்த பேரணிக்கான இறுதி திட்டங்கள் இன்னும் வகுக்கப்படவில்லை என கூறியுள்ள விவசாயிகள், 24-ந்தேதிக்குள் பேரணி திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதேநேரம் இந்த பேரணியை ஒழுக்கமுடன் நடத்துவதற்கான நடவடிக்கைகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இதற்காக பல்வேறு தன்னார்வலர்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

சீக்கியர்களின் புனித தினமான குரு கோவிந்த் சிங் ஜெயந்தி இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களை முடித்து இன்னும் ஏராளமான விவசாயிகள் டெல்லி வர இருப்பதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு கண்டனம்: மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
2. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள், தடுப்பூசிகள் போடுவதை விரைவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
3. டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
4. ஏப்.1 முதல் கார்களில் ஏர்-பேக் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு
கார்களில், உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
5. டெல்லியில் இன்று கொரோனா தொற்று பாதிப்பால் 3 மட்டும் உயிரிழப்பு!
டெல்லியில் இன்று மேலும் 312 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.