இந்தியாவில் இருந்து நேபாளம், பூடான், மாலத்தீவுகளுக்கு தடுப்பு மருந்துகள் சென்றடைந்தன


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 20 Jan 2021 3:49 PM GMT (Updated: 20 Jan 2021 5:38 PM GMT)

இந்தியாவில் இருந்து நேபாளம், பூடான், மாலத்தீவுகளுக்கு தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் சென்றடைந்தன.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் என்னும் கொலைகார வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்துகட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த 3-ந் தேதி ஒப்புதல் அளித்தது.

மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம்

அதைத் தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. கடந்த 16-ந் தேதி முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

முதலில் டாக்டர்கள், நர்சுகள், முன்கள பணியாளர்கள் என 3 கோடி பேருக்கும், அவர்களை தொடர்ந்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட நாள்பட்ட நோயாளிகள் என 27 கோடி பேருக்கும் தடுப்புசி முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் ஆகும்.

இதுவரை இந்தியாவில் 7 . 86 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மனி வரை 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்   1,12,007 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பிற நாடுகளுக்கும்..

இந்நிலையில், மாலத்தீவுகள், பூட்டான், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

உள்நாடு, வெளிநாடு தேவையை பொறுத்து பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவின் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இது குறித்து பிரதமர் மோடியும் டுவிட்டரில், ‘சர்வதேச சமூகத்திற்கான சுகாதார தேவைக்கு நம்பகமான நட்பு நாடாக இருப்பதற்கு இந்தியா பெருமைப்படுகிறது. சில நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி 21-ந்தேதி தொடங்குகிறது. வரும் நாட்களில் மேலும் சில நாடுகளுக்கும் வழங்கப்படும்’ என பதிவிட்டிருந்தார்.

தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட்டன

இந்தநிலையில் அறிவித்தபடி முதல்கட்டமாக நேபாளத்துக்கு 10 லட்சம் தடுப்பு மருந்துகளும், பூட்டானுக்கு 1½ லட்சம் தடுப்பு மருந்துகளும், மாலத்தீவுகளுக்கு 1 லட்சம் தடுப்பு மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டன.இந்திய தடுப்பூசிகள் மாலத்தீவை அடைந்துள்ளன.

அதுபோல்  பூட்டானுக்கும் தடுப்பூசிகள்சென்றடைந்து உள்ளன.

மேலும், மியானமார், சீசெல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

மேலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், மொரீஷியஸ் நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.


Next Story