கொரோனாவில் இருந்து மீள சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் கீழ் குறைவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Jan 2021 12:00 AM GMT (Updated: 20 Jan 2021 9:55 PM GMT)

இந்தியாவில் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீள்வதற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 7 மாதங்களுக்கு பிறகு 2 லட்சத்துக்கும் கீழாக குறைந்தது.

புதுடெல்லி, 

உலகளவில் கொரோனோ வைரஸ் பெருந்தொற்றின் மோசமான பிடியில் சிக்கிய நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இந்தியா அதற்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது.

அந்த வகையில் உலகின் முன்னேறிய நாடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, பலமான மருத்துவ கட்டமைப்பு வசதிகளாலும், தரம் வாய்ந்த சிகிச்சைகளாலும், சுகாதார பணியாளர்களின் ஓய்வு ஒழிச்சலற்ற சேவையாலும் கொரோனா மீட்பில் நமது நாடு தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில், இந்தியாவில் 16 ஆயிரத்து 988 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 4,516 பேரும், கேரள மாநிலத்தில் 4,296 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 45 ஆயிரத்து 741 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மீட்பு விகிதமும் 96.70 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 13 ஆயிரத்து 823 பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 7 லட்சத்து 64 ஆயிரத்து 120 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டும், பாதிப்பு இந்த அளவுக்கே பதிவாகி இருப்பது ஆறுதல் அளிக்கிறது.

இதுவரை 18 கோடியே 85 லட்சத்து 66 ஆயிரத்து 947 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.

ஒரு நாளில் 162 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கி, சிகிச்சை பலனற்றுப்போய் உயிரிழந்து இருக்கிறார்கள். அவர்களில் மராட்டிய மாநிலத்தில்தான் நாட்டிலேயே அதிக அளவாக 50 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் 26 பேர், மேற்கு வங்காளத்தில் 11 பேர், டெல்லியிலும், சத்தீஷ்காரிலும் தலா 10 பேர், கர்நாடகத்தில் 9 பேர் கொரோனாவுக்கு இரையாகி இருக்கிறார்கள்.

நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது. இதில் மராட்டிய மாநிலம்தான் 50 ஆயிரத்து 523 பேரை பலிகொண்டு, முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகம் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் கர்நாடகம் உள்ளது. அங்கு 12 ஆயிரத்து 181 பேர் பலியாகி உள்ளனர்.

பிற மாநிலங்களை பார்த்தால் டெல்லியில் 10 ஆயிரத்து 764 பேரும், மேற்கு வங்காளத்தில் 10 ஆயிரத்து 74 பேரும், உத்தரபிரதேசத்தில் 8,584 பேரும், ஆந்திராவில் 7,142 பேரும் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 1.44 சதவீதமாக நீடிக்கிறது. இது உலகின் மிகக்குறைந்த மரண விகிதங்களில் ஒன்று என்பது கோடிட்டு காட்டத்தக்கது.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வருவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி, 1 லட்சத்து 97 ஆயிரத்து 201 ஆகும். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.86 சதவீதம் ஆகும்.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் கீழாக குறைந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 72 சதவீதம்பேர், கேரளா, மராட்டியம், உத்தரபிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story