உடல் குறைவால் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு மேலும் 3 நாட்கள் சிகிச்சை மருத்துவமனை தரப்பில் தகவல்


உடல் குறைவால் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு மேலும் 3 நாட்கள் சிகிச்சை மருத்துவமனை தரப்பில் தகவல்
x
தினத்தந்தி 21 Jan 2021 3:17 PM GMT (Updated: 21 Jan 2021 3:17 PM GMT)

உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்ட சசிகலா மேலும் 3 நாட்கள் சிகிச்சையில் இருப்பார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெங்களூரு,

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, வரும் 27-ந் தேதி விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறை நிர்வாகம் அறிவித்தது.

இரு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை, அவருக்கு காய்ச்சலுடன் மூச்சுத்திணறலும் அதிகமானதால், உயர் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கொரோனா இல்லை

காய்ச்சல் இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் இருந்து, விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அந்த மருத்துவமனையில் அவர் இன்னும் 3 நாட்கள் வரை தங்க வைக்கப்படுவார் என தெரிகிறது.

போலீஸ் பாதுகாப்பு

மருத்துவமனையில் இருந்து கிளம்பும் போது, அங்கு அவரை பார்ப்பதற்காக கூடியிருந்தவர்களை நோக்கி கையசைத்துவிட்டு சசிகலா கிளம்பி சென்றார்.

விக்டோரியா மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது சசிகலா 2-வது மாடியில் உள்ளார். அவருடன் 4 வக்கீல்களும் உள்ளனர். சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்


Next Story