மேலும் 20 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணம்: மீட்பு விகிதம் 96.75 சதவீதமாக உயர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Jan 2021 11:15 PM GMT (Updated: 21 Jan 2021 9:20 PM GMT)

இந்தியாவில் மேலும் 20 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைந்தனர். மீட்பு விகிதம் 96.75 சதவீதமாக உயர்ந்தது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நாடு வெற்றிகரமாக போராடிக்கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல், வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

ஒரு கட்டத்தில் ஒரு நாள் பாதிப்பு 97 ஆயிரம் என்ற அளவுக்கு சென்றபோதும், தற்போது அது சராசரியாக 15 ஆயிரம் என்ற அளவுக்கு நீடிக்கிறது.

அந்த வகையில் நேற்று 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 15 ஆயிரத்து 223 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 7.80 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இந்த அளவுக்கு குறைவாக இருக்கிறது.

நாட்டில் இதுவரை 18.93 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.

கேரளாவில் அதிகபட்சமாக 6,815 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாவோரைக் காட்டிலும், அந்த தொற்று நோயில் இருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.

நேற்றும்கூட, 15 ஆயிரத்து 223 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்த நிலையில், 19 ஆயிரத்து 965 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 2 லட்சத்து 65 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 87.06 சதவீதத்தினர் 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்தோர் ஆவார்கள். நாட்டிலேயே அதிகளவில் கேரளாவில்தான் 7,364 பேர் ஒரு நாளில குணம் அடைந்தனர். அடுத்து மராட்டியத்தில் 4,589 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மீட்பு விகிதம் என்பது 96.75 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து மீள முடியாமல், 151 பேர் நேற்று பலியானதால், மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 52 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இறந்துபோன 151 பேரில் 59 பேர் மராட்டிய மாநிலத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் 18 பேரும், டெல்லி, சத்தீஷ்காரில் தலா 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை பலியான 1 லட்சத்து 52 ஆயிரத்து 869 பேரில், 50 ஆயிரத்து 582 பேரை இழந்துள்ள மராட்டியம் முதல் இடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்கிறது. மூன்றாவது இடத்தை 12 ஆயிரத்து 185 பேரை பறிகொடுத்த கர்நாடகம் வகிக்கிறது.

நாட்டில் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.

நேற்றைய நிலவரப்படி 1 லட்சத்து 92 ஆயிரத்து 308 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மொத்த பாதிப்பில் இது வெறும் 1.81 சதவீதம்தான் என்பது ஆறுதலான அம்சம்.

கொரோனா தடுப்பூசி போடும் பணியும் கடந்த 16-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 2,398 அமர்வுகளில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 649 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தியோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது.

Next Story