அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் - ராணுவ அமைப்பின் தலைவர் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Jan 2021 11:00 PM GMT (Updated: 21 Jan 2021 9:31 PM GMT)

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.

புதுடெல்லி, 

சி.ஐ.ஐ. என்று அழைக்கப்படுகிற இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, இணைய வழியில் நேற்று கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.

இதில், இந்திய ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில், இந்திய பாதுகாப்பு படைகள் ஏராளமான உள்நாட்டு தளவாடங்களை கொண்டிருக்கும். இவற்றை இந்தியா மிக பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நிலையையும் பார்க்க முடியும்.

எங்களுடைய ஒவ்வொரு திட்டத்திலும், தொழில் துறையில் இருந்து வளர்ச்சி மற்றும் உற்பத்தி பங்குதாரரை நாங்கள் அழைத்திருக்கிறோம். ஏவுகணை போன்ற முக்கியமான அமைப்புகளில்கூட தனியார் துறைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளுக்கு தேவையான அதிநவீன தளவாட அமைப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி உள்நாட்டிற்குள் செய்யப்படுகிறபோதுதான் ஒரு நாடு உண்மையான சுயசார்பு நாடு என்று கூறப்படும்.

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடுகளில இந்தியாவும் ஒன்று. ஆயுதப்படைகள் அடுத்த 5 ஆண்டுகளில் ஆயுதங்கள் கொள்முதலுக்காக 130 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9.10 லட்சம் கோடி) செலவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசு தற்போது இறக்குமதி செய்யப்பட்ட ராணுவ தளவாடங்களை நம்பி இருப்பதை குறைக்க விரும்புகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ராணுவ தளவாட உற்பத்தியில் 25 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1.75 லட்சம் கோடி) விற்றுமுதலுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) ராணுவ தளவாட ஏற்றுமதி இலக்கும் அடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story