டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு


டெல்லியில் விவசாயிகள்  போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு
x
தினத்தந்தி 23 Jan 2021 12:03 AM GMT (Updated: 23 Jan 2021 12:03 AM GMT)

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 11-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

புதுடெல்லி, 

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 2 மாதங்களை நெருங்கி வருகிறது. இந்த போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்காக அரசுடன் ஏற்கனவே 10 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து விட்டன. 

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகளும், ரத்து செய்ய முடியாது என்று அரசும் உறுதியாக இருப்பதால் இந்த பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. எனினும் கடந்த 20-ந்தேதி நடந்த 10-வது சுற்று பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சற்றே நெகிழ்வுத்தன்மையை வெளியிட்டது.

அதாவது இந்த சட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை பிறப்பித்திருக்கும் நிலையில், இந்த சட்டங்களை 1 அல்லது 1½ ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க தயார் என கூறியது. அத்துடன் அரசு மற்றும் விவசாயிகள் தரப்பு பிரதிநிதிகளை கொண்ட கூட்டுக்குழுவை அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காணவும் யோசனை தெரிவித்தது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் கூடி ஆலோசித்த விவசாயிகள், அரசின் பரிந்துரைகளை ஏற்க முடியாது என அறிவித்தனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு பிரதிநிதிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு இடையே நேற்று 11-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர், உணவுத்துறை மந்திரி பியூஷ் கோயல், வர்த்தக இணை மந்திரி சோம் பர்காஷ் ஆகியோர், 41 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை தொடங்கியதுமே, கடந்த பேச்சுவார்த்தையில் மத்திய அரசு அறிவித்த பரிந்துரைகளை ஏற்கமாட்டோம் என முடிவு செய்திருப்பதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர். மேலும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற்று, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக்கொள்வோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ஆனால், இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சாத்தியமான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியிருக்கிறோம், எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய மந்திரிகள் வலியுறுத்தினர். குறிப்பாக, ‘இந்த சட்டங்களால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற போதிலும் அவற்றை 1½ ஆண்டுகள் வரை நிறுத்தி வைக்க அரசு முன்வந்துள்ளது. 

இந்த காலத்தை 2 ஆண்டுகள் வரையும் நீட்டிக்க முடியும். எனவே விவசாயிகள் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வர வேண்டும்’ என மத்திய மந்திரிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் விவசாயிகள் தங்கள் நிலையில் உறுதியாக இருந்தனர். இந்த சட்டங்களை திரும்பப்பெறுவதற்கு குறைவான எந்த திட்டத்தையும் ஏற்கமாட்டோம் என அவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.இதனால் நேற்றைய பேச்சுவார்த்தையும் எவ்வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியிலேயே முடிந்தது. 

இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்தனர். மேலும் 26-ந்தேதி நடத்த உள்ள டிராக்டர் பேரணியை திட்டமிட்டபடி நடத்துவோம் எனவும் அவர்கள் கூறினர்.

Next Story