டெல்லி போலீசார் அனுமதி; குடியரசு தினத்தில் அமைதியாக பேரணி நடத்தப்படும்: விவசாயிகள் அமைப்பு


டெல்லி போலீசார் அனுமதி; குடியரசு தினத்தில் அமைதியாக பேரணி நடத்தப்படும்:  விவசாயிகள் அமைப்பு
x
தினத்தந்தி 23 Jan 2021 2:51 PM GMT (Updated: 23 Jan 2021 2:51 PM GMT)

டெல்லியில் குடியரசு தினத்தில் அமைதியாக எங்களது அணிவகுப்பு நடத்தப்படும் என விவசாயிகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோரி கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

நேற்றுமுன்தினம் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே நேற்று நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் கூறி வந்தனர்.  இதற்கு அனுமதி வழங்கும் டெல்லி போலீசாருக்கே உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து விட்டது.

இந்நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவதுபற்றி ஸ்வராஜ் இந்தியா அமைப்பினை சேர்ந்த யோகேந்திர யாதவ் கூறும்பொழுது, வருகிற 26ந்தேதி குடியரசு தினத்தில் விவசாயிகளின் அணிவகுப்பு நடத்தப்படும்.

இதற்காக தடுப்பான்கள் திறக்கப்பட்டு நாங்கள் டெல்லிக்குள் நுழைவோம்.  விவசாயிகள் மற்றும் டெல்லி போலீசார் இடையே ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது.  இதுபற்றிய இறுதி விவரங்கள் இன்றிரவு முடிவு செய்யப்படும் என கூறினார்.

நாங்கள் வரலாற்று சிறப்புடைய மற்றும் அமைதியான அணிவகுப்பு நடத்துவோம்.  அது, குடியரசு தின அணிவகுப்புக்கோ அல்லது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கோ எந்தவித பாதிப்பினையும் ஏற்படுத்திடாது என அவர் கூறியுள்ளார்.

பாரதீய கிசான் யூனியன் அமைப்பின் குர்னாம் சிங் சாதுனி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, குழு வழங்கிய அறிவுறுத்தலை பின்பற்றி அணிவகுப்பில் கலந்து கொள்ளும் விவசாயிகள் கண்ணியம் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன் என கூறியுள்ளார்.

Next Story