டிராக்டர் பேரணியில் பங்கேற்க பஞ்சாப், அரியானாவில் இருந்து 30 ஆயிரம் டிராக்டர்கள் விரைந்தன


டிராக்டர் பேரணியில் பங்கேற்க பஞ்சாப், அரியானாவில் இருந்து 30 ஆயிரம் டிராக்டர்கள் விரைந்தன
x
தினத்தந்தி 23 Jan 2021 11:41 PM GMT (Updated: 23 Jan 2021 11:41 PM GMT)

விவசாய சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பமாக, நகருக்குள் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீஸ் அனுமதி வழங்கி விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

புதுடெல்லி, 

விவசாய சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் திடீர் திருப்பமாக, நகருக்குள் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி போலீஸ் அனுமதி வழங்கி விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். பஞ்சாப், அரியானாவில் இருந்து 30 ஆயிரம் டிராக்டர்கள் டெல்லிக்கு விரைந்தன.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்கள், குடியரசு தினத்தன்று டெல்லியி்ல் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தன. அதற்கு இடைக்கால தடை விதிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கவில்லை.

அதைத்தொடர்ந்து, டிராக்டர் பேரணியை நெரிசல் மிகுந்த வெளிவட்டச்சாலைக்கு பதிலாக மாற்றுப்பாதையில் நடத்துமாறு விவசாய சங்கங்களிடம் டெல்லி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால் விவசாய சங்கங்கள் மறுத்து விட்டன. இதுதொடர்பாக கடந்த 20-ந் தேதி இருதரப்புக்கும் இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருந்தது.


இந்தநிலையில், நேற்று போலீஸ் அதிகாரிகளுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், டெல்லி நகருக்குள் டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்ததாக விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அபிமன்யு கோகர் என்ற விவசாய சங்க தலைவர் கூறியதாவது:-

நகரில் டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளித்து விட்டனர். காசிப்பூர், சிங்கு, திக்ரி எல்லைகளில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கும். இதுதொடர்பான விவரங்கள் இரவு இறுதி செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார். எல்லையில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு, 26-ந் தேதி பேரணி நடத்தப்படும் என்று தர்ஷன் பால் என்ற விவசாய சங்க தலைவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம், அரியானா மாநிலம் சிர்சா மாவட்டம் ஆகியவற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் டிராக்டர்களில் விவசாயிகள் நேற்று டெல்லியை நோக்கி புறப்பட்டனர்.

மளிகை பொருட்கள், படுக்கைகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு சென்றனர். சில விவசாயிகள் டீசலை மிச்சப்படுத்துவதற்காக, மற்ற விவசாயியின் டிரெய்லரில் தங்கள் டிராக்டரை ஏற்றி வைத்தும், வேறு சிலர் மற்ற டிராக்டருடன் தங்கள் டிராக்டரை கயிற்றால் இணைத்தும் கொண்டு சென்றனர்.


Next Story