இந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும்’’ மம்தா பானர்ஜி கோரிக்கை


இந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும்’’ மம்தா பானர்ஜி கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2021 1:13 AM GMT (Updated: 24 Jan 2021 1:13 AM GMT)

இந்தியாவுக்கு 4 தலைநகரங்களை உருவாக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.


கொல்கத்தா, 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை தேச நாயகன் தினமாக மேற்கு வங்காள அரசு கொண்டாடியது. கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சிலைக்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது தலைமையில் ஷ்யாம் பஜாரில் இருந்து ரெட் ரோடு வரை ஊர்வலம் நடந்தது. அதன் முடிவில், தொண்டர்களிடையே மம்தா பானர்ஜி பேசினார். அவர் பேசியதாவது:-

விடுதலை இயக்கம், வங்காளத்திலும், பீகாரிலும்தான் தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி, வங்காளத்துக்கு வந்துதான் போராடுவது வழக்கம். எண்ணற்ற புரட்சிகளும், சீர்திருத்தங்களும் வங்காளத்தில்தான் தொடங்கின.அத்தகைய பெருமை வாய்ந்த கொல்கத்தாவை மீண்டும் இந்தியாவின் தலைநகராக அறிவிக்க வேண்டும். கொல்கத்தாவை மட்டுமின்றி, வடஇந்தியா, தென்னிந்தியா, வடகிழக்கு இந்தியா என ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தலைநகர் என மொத்தம் 4 தலைநகரங்களை அறிவிக்க வேண்டும். 4 தலைநகரங்களிலும் நாடாளுன்ற கூட்டங்களை நடத்த வேண்டும்.

அதுபோல், நேதாஜி பிறந்தநாளை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவரது சிந்தனையில்தான் இந்திய தேசிய ராணுவமும், திட்ட கமிஷனும் உருவாக்கப்பட்டன. ஆனால், நேதாஜியை வழிகாட்டியாக கருதுபவர்கள், திட்ட கமிஷனை கலைத்தது ஏன்?

நேதாஜி பிறந்த நாளை பராக்கிரம தினமாக மத்திய அரசு கொண்டாடுகிறது. பராக்கிரமத்துக்கு என்ன அர்த்தம் என்றே தெரியவில்லை. அவர் தேச நாயகன். மத ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரை நாங்கள் தேர்தலுக்காக நினைப்பது இல்லை. 365 நாட்களும் எங்கள் இதயத்தில் அவர் வாழ்கிறார்”இவ்வாறு அவர் கூறினார்.


Next Story